மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங்கிடம் மனுவை கொடுத்துவிட்டு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் கோவிலாம்பூண்டி கந்தமங்கலத்தைச் சேர்ந்த சத்தியவேணி என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 6 பேர் இணைந்து கடந்த 15 ஆண்டுகளாக சத்தியவேணி வசித்து வரும் வீட்டை இடித்துள்ளனர். மேலும் அந்த நபர்கள் வீட்டில் இருந்த 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றதாக சத்தியவேணி தெரிவித்துள்ளார். இந்த மனு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.