வீட்டை இழந்த இரண்டு குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது தமிழ்நாட்டில் மக்கள் குடிநீர், மின்சாரம் என தங்களது வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட போராடித்தான் வாங்க வேண்டியதாக இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பொதுமக்களின் போராட்டங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாகங்குடி கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டின் அருகே இவரது நண்பரான வீரய்யன் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு இவர்கள் இரண்டு பேரும் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றனர். அப்போது இவர்களது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் விபத்தில் மாணவர்களின் பாட புத்தகங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் எரிந்து நாசமாகி விட்டது .
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி கிராம மக்கள் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.