யானைகள் வீட்டை உடைத்து சேதப்படுத்தியதால் 2 பேர் காயமடைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் பள்ளப்படி அம்பலக்காடு பகுதிக்குள் இரண்டு காட்டு யானைகள் நுழைந்தது. இதனை எடுத்து சதாசிவம் என்பவரது வீட்டை யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அப்போது சதாசிவத்தின் குடும்பத்தினர் பின்புற வாசல் வழியாக தப்பி ஓட முயன்ற போது யானைகள் அவர்களை விரட்டி சென்றது.
அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து சதாசிவத்தின் மனைவி ஆனந்தாயி(50), மகள் புவனேஸ்வரி(28) ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் யானைகளை விரட்டியடித்தனர். பின்னர் காயமடைந்தவர்கள் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.