தனியார் நிறுவன மேலாளரின் வீட்டில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகர் கிருஷ்ணமூர்த்தி நகரில் பசுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய வீட்டின் கீழ் தளத்தில் மாமனார், மாமியார் வசித்து வருகின்றனர். இதனால் பசுபதி தனது மனைவியுடன் சென்னைக்கு செல்லும்போது வீட்டைப் பூட்டாமல் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திரும்பி வந்த பசுபதி வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சிதறிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது 20 பவுன் தங்க நகைகள், 20 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பசுபதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.