என் கணவரை விரைவில் அலுவலகத்திற்கு அழையுங்கள் என்று கூறி மனைவி சிஇஓவிற்கு மெயில் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சேர்மன் ஹர்ஸ்கோன்கா, இவர் தனது டுவிட்டரில் வித்தியாசமான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மனைவி தனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் தன் கணவரை அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிடும்படி கேட்டிருந்தார்.
இது குறித்து அந்தப் பெண் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: “நான் உங்களிடம் பணியாற்றும் மனோஜ் என்பவரின் மனைவி. மனோஜை நீங்கள் அலுவலகத்திற்கு வரவழைத்து வேலை பாருங்கள். இவர் வீட்டிலேயே வேலை செய்து கொண்டிருந்தால் என் திருமண வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். ஒருநாளுக்கு பத்து முறை டீ குடிக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூமிலும் அமர்ந்து பணியாற்றுகிறார். பிறகு அந்த ரூமையே குப்பையாக மாற்றிவிடுகிறார். மறு நாள் வேறு ஒரு ரூமிற்கு சென்று அதையே செய்கிறார்.
அடிக்கடி சாப்பிட ஏதாவது கேட்டுக் கொண்டே இருக்கிறார். பல நேரங்களில் ஆபீஸ் காலில் இருக்கும்போதே தூங்கி விடுகிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. மூன்றாவது குழந்தையாக இவரை என்னால் பார்க்க முடியவில்லை. எனது கணவர் இரண்டு தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளார். இதனால் அவரை விரைந்து அலுவலகத்திற்கு அழையுங்கள்” என்று அவர் கூறியிருப்பது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது .