புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தேசிய தலைநகரின் எல்லை பகுதியான சிங்குவில் சீக்கிய துறவி ஒருவர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலையால் உயிரிழந்தார்.
ஹரியானா மற்றும் பஞ்சாபில் மதத்துறவியான சாந்த் பாபா ராம் சிங்குக்கு, பலர் சீடர்களாக உள்ளனர். பல சீக்கிய அமைப்புகளில் அவர் உறுப்பினராக இருந்துள்ளார். உரிமம் பெற்ற தனது துப்பாக்கியை கொண்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரின் உடலின் அருகே கண்டெடுக்கப்பட்ட தற்கொலை கடிதத்தில், விவசாயிகளின் இன்னல்களை கண்டு மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து அவர் எழுதிய கடிதத்தில், “உரிமைகளுக்காக தெருவில் இறங்கி போராடும் விவசாயிகளின் இன்னல்களை கண்டேன். அவர்களுக்கான நீதி வழங்காமல் இருப்பதை கண்டு மன உளைச்சலுக்கு உள்ளானேன். அது ஒரு குற்றம். எனவே, அரசின் அடக்குமுறையை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த ஊழியன் தற்கொலை செய்ய போகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.