சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி தொகுதி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பலமுறை போட்டியிட்டு வென்று தொகுதியாகும். மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை இந்த தொகுதியில் தான் உள்ளது. விசைத்தறி, மலர் சாகுபடி, வெள்ளிக்கொலுசு தயாரிப்பு, கயிறு உற்பத்தி இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக 7 முறையும், திமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் முதலில் தொகுதி உருவாக்கப்பட்ட 1957 தேர்தலில் மட்டும் காங்கிரஸ் கட்சி வென்றது.
தொகுதியின் தற்போதைய உறுப்பினராக அதிமுகவின் மனோன்மணி உள்ளார். வீரபாண்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,59,441 ஆகும். வீரபாண்டி தொகுதியில் உள்ள பனமரத்துப்பட்டி பகுதியில் அரளி, சாமந்தி, ரோஜா, மல்லி போன்ற மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மலர்களை விற்பனை செய்வதற்கான கூட்டுறவு மையம், குளிர்பதன கிடங்கு மற்றும் வாசனை திரவிய தொழிற்சாலை ஆகியவை உருவாக்க வேண்டுமென்பது மக்களின் நீண்டகால கோரிக்கைகளாக உள்ளன.
வேம்படிதாளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். சேலம் உருக்காலை தனியார்மயமாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளன. திருமணிமுத்தாற்றில் சாய கழிவு நீர் கலப்பதால் ஆற்று நீர் மாசடைவதாகவும், மழைக்காலங்களில் ரசாயனம் கலந்த வெண்ணுரை பெருக்கெடுத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்படுவதாக தென்னை விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நகர்ப்புற மற்றும் கிராமப்புற சாலைகள் சீரமைக்கபடாமல் உள்ளதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எம்எல்ஏவான மனோன்மணி தொகுதி பக்கம் வருவதில்லை என்று குற்றம் சாட்டும் மக்கள் அடிப்படை பிரச்சனைகள் கூட தீர்க்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.