தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பிறகு கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் காசோலை வழங்கினார்.
அதில் காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த படைவீரர் கே. ஏகாம்பரம் அவர்களுடைய மனைவி இ. குமாரி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் கே. கருப்பசாமி அவர்களுடைய மனைவி ஆர். தமயந்தி மற்றும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் பி.பழனிகுமார் அவர்களுடைய மனைவி ஜி. பாண்டியம்மாள் ஆகியவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.
மேலும் லடாக்-காரகோரம் கணவாயிலிருந்து மலரி வரை உள்ள பனிச்சறுக்கு மூலம் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற முதல் தமிழக ராணுவ வீரரான கேப்டன் குபேர காந்திராஜ்க்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.