Categories
கிரிக்கெட் விளையாட்டு

வீரர்களுக்குள் ஏற்பட்ட அடிதடி… சில்லறைத்தனமாக நடந்த வங்கதேச வீரர்கள்…!

யு-19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி முடிவடைந்தபின், இந்திய – வங்கதேச வீரர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டில் சீண்டல்கள் இல்லாமல் இருக்காது. சில நேரங்களில் சின்ன சின்ன சீண்டல்கள் ரசிகர்களிடையே போட்டியை சுவாரஸ்யமாக்கும். ஆனால் அந்த சீண்டல்கள் அதிகமானால் வீரர்கள் மீது ரசிகர்களுக்கு கோபம் அதிகமாகும். கிரிக்கெட்டில் சீண்டல்கள் நடப்பது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். ஆனால் அது எப்போதும் அடிதடியில் முடியாது. போட்டி முடிவடைந்த பின் சீண்டல்களில் ஈடுபட்ட வீரர்கள் கைகுலுக்கி ஸ்பிரிட் ஆஃப் தி கேமை காப்பாற்றுவார்கள்.

ஆனால் நேற்று நடந்த யு-19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்களை தொடக்கம் முதலே வங்கதேச வீரர்கள் சீண்டிக்கொண்டே இருந்தனர். ஆனால் அந்த சீண்டல் இரண்டாவது ஓவரின் போதே சிறிதளவு எல்லை மீறியது. திவ்யன்ஷ் சக்சேனாவை வங்கதேச பந்துவீச்சாளர் வம்புக்கு இழுக்க, நடுவர் ஈடுபட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.

தொடர்ந்து சீண்டலில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் விக்கெட்டை வீழ்த்தியபோது, வரம்பு மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இந்திய வீரர்கள் பந்துவீச்சின் போது வங்கதேசத்தின் சீண்டல்களுக்கு பதில் கொடுக்க, ஆட்டத்தில் பொறி பறந்தது. இறுதியாக வங்கதேசம் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அப்போது மைதானத்திற்குள் ஒடிவந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களை ஒருமையில் பேசத் தொடங்கினர். வங்கதேச வீரர் இஸ்லாம் இந்திய வீரர்களை ஒருமையில் பேசியது கேமராவிலேயே பதிவாகியது.

இதற்கெல்லாம் உச்சமாக இந்திய வீரர்களுடன் வங்கதேச வீரர்கள் அடிதடியில் ஈடுபட்டது ரசிகர்களிடையே கோபத்தை வரவழைத்தது. இதுபோன்ற செயல்களால் விளையாட்டின் மகத்துவம் கெடுவதுடன், ரசிகர்களின் வெறுப்பையும் அந்த வீரர்களும், நாடும் சம்பாதிக்கும்.

இதுகுறித்து வங்கதேச கேப்டன் அக்பர் அலி பேசுகையில், ” எங்கள் அணியில் சிலர் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தனர். ஆட்டத்திற்கு பின் நடந்தது, யாரும் எதிர்பாராதது. இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.

வங்கதேச சீனியர் அணியினரின் கீழ்தரமான செயல்களாலேயே சர்வதேச ரசிகர்களும் அவர்களை பெரிய அணியாக மதிக்காமல் இருப்பார்கள். இப்போது ஜூனியர் அணியும் சீனியர் அணியைப் போல் செயல்படுவதால் வங்கதேச கிரிக்கெட் கலாச்சாரம் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/Ashikur_Shovon/status/1226571013493645312

Categories

Tech |