உக்ரைனிலுள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டி வரும் ரஷ்யா அந்நாட்டிற்குள் பல்வேறு எல்லைப்பகுதிகள் வழியாக ஊடுருவி நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் நோட்டா அமைப்பில் சேர்வதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்துக்கு மேலான படைகளை குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இருப்பினும் ரஷ்யா தங்களுக்கு உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணமில்லை என்று கூறியுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உக்ரேனின் மீது ரஷ்ய படைகள் பல்வேறு பகுதிகள் வழியே ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளது. அதன் அறிகுறியாக கீவ் நகரில் அதி பயங்கர வெடிகுண்டு சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா உக்ரைனிலுள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி ரஷ்யா உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ஏவுகணைகளை பொழிந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஷ்யாவின் இந்த அதிபயங்கர தாக்குதலில் சிக்கி தங்கள் நாட்டு அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.