கர்நாடகாவின் பெங்களூரு நகரிலுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அவற்றில் 175 பயணிகள் இருந்துள்ளனர். இதனிடையில் விமானத்தின் கழிவறையில் மிரட்டல் குறிப்பு ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அதை விமான சிப்பந்தி ஒருவர் கவனித்துள்ளார். இதையடுத்து இது பற்றி விமான கேப்டனிடம் தெரிவித்து இருக்கிறார். அதாவது விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது. அதன்பின் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்து, விமானத்தை முறையாக அனுமதி பெற்று விமான நிலையத்தில் தரை இறக்கி இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புபடை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதற்கிடையில் விமான பயணிகளின் வசதிக்காக மற்றொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் சந்தேகப்படும்படியான பயணிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அறிவியல் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இண்டிகோ விமானம் இது போன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதன் முறையல்ல. சென்ற ஜூலை 28ஆம் தேதி இதே போன்று ஒரு சம்பவத்தில் அசாம் விமான நிலையத்தில், கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் திடீரென ஓடுபாதையிலிருந்து விலகிசென்றது.
அதனை தொடர்ந்து விமானம் நிறுத்தப்பட்டு 6 மணி நேரம் வரை அதை சரிசெய்ய முயன்று, தொழில்நுட்ப கோளாறை சீர் செய்யும் பணி தோல்வியில் முடிந்தது. பின் விமானம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் கடந்த ஜூலை 21-ம் தேதி இண்டிகோ விமான பயணி ஒருவர் வெடி குண்டு வைத்திருக்கிறேன் எனகூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். உடனே விமானம் பாட்னா விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. முன்பாக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஐதராபாத்துக்கு வந்த ஒரு இண்டிகோ விமானமானது தொழில்நுட்ப கோளாறால், பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு திருப்பிவிடப்பட்டது. இதேபோல் சென்ற 2-ம் தேதி டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் இண்டிகோ விமானத்தின் முன் கார் ஒன்று செயல்படாமல் நின்றதில் விமானம் புறப்படுவதில் தடங்கல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.