வெடிமருந்து கடத்த முயன்ற குற்றத்திற்காக வட மாநில தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் தொழிலதிபரான வருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் விலை மதிப்புள்ள இரிடியம், உலோகங்கள் போன்றவற்றை வாங்கும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரிடம் உலோகங்களை வாங்கிய வருண் அதனை ஆய்வு செய்வதற்காக கொச்சிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு கோவையில் தங்கத்தை பரிசோதனை செய்பவர்களிடம் அதனை கொடுத்து ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் சுமார் 2 1/2 கிலோ உலோகங்களுடன் டெல்லி செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக வருண் விமானநிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அதிகாரிகள் நடத்திய சோதனையில் வருண் வைத்திருந்த உலோக துகள்களில் வெடி மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வருணை பிடித்து பீளமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதனையடுத்து பரிசோதனைக்கு உட்படுத்திய உலோக துகள்களில் நைட்ரேட் வெடிபொருள் கலந்திருப்பது உறுதியானது. அதன்பின் வெடிபொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வருணை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.