மூத்த அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவலை ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி Moshen Fakhrizade டெஹ்ரான் அருகே முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிர்ச்சியான தகவலை ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த படுகொலை தொடர்பாக ஈரானிய செய்தி நிறுவனங்கள் கூறுகையில், துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பாக, விஞ்ஞானியின் காரை தான் முதலில் வெடிகுண்டு மூலமாக குறிவைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவர் ஈரான் தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களில் முன்னேற்றம் காண மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது என மேற்கத்திய செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும் ஈரானின் வெடிகுண்டுகளின் தந்தை என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார். அணு ஆயுதம் தொடர்பான தங்களின் திட்டங்கள் அனைத்தும் போருக்கான ஆயத்தங்கல் அல்ல என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈரான் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் ஈரானின் முக்கிய தளபதிகளான சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் படுகொலை செய்ததும் ட்ரம்பின் அரசாங்கம்தான். இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நாட்களில் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று கருத்து உலவி வரும் நிலையில், தற்போது ஈரானின் அணு விஞ்ஞானியான ஒருவர் படுகொலை செய்யப்பட்டது அமெரிக்கா மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.