மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இதனால் சாமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையில் சமையல் எரிபொருள் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் மத்திய அரசை லாலு பிரசாத் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அன்புள்ள பணவீக்கம் இரட்டை எந்திர அரசாங்கத்துடன் நீங்கள் எவ்வாறு தொடர்புடையவர்? எரிவாயு எண்ணெய், பெட்ரோல், டீசல், காய்கறிகள் அனைத்தையும் விலை உயர்ந்ததாக மாற்றுவதன் மூலம் இந்த அரசாங்கம் சாதாரண மக்களை வெட்கமில்லாமல் கொள்ளையடிக்கிறது” என்று பதிவு செய்துள்ளார்.