கொடைக்கானல் பாதரசஆலை வளாகத்தில் வெட்டப்பட்ட 1 மரத்திற்கு பதில் 10 மரங்களை நடவேண்டுமென தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொடைக்கானில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவன பாதரசஆலை நிர்வாகம் பாதரச கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் கொடைக்கானல் வனவிலங்கு சரணாலாயத்தை ஒட்டி உள்ள ஆலை வளாகத்தில் அனுமதி இன்றி மரங்களை வெட்டியதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியது. அதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இது குறித்து மத்திய மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், மாவட்ட நிர்வாக சுற்றுச்சூழல் வனத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறபித்திருந்தது.
இதையடுத்து அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்த சூழ்நிலையில், வழக்கினை விசாரித்த பசுமைதீர்ப்பாய நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் போன்றார் பிறப்பித்த தீர்ப்பில், ஆறுகள் காப்புக்காடுகளில் ஏற்படும் சூழல் பாதிப்புகள் தொடர்பாக முறையான ஆய்வுகள் நடத்தாமல் பாதரசகழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் முயற்சி நடைபெறுகிறது. நிறுவன வளாகத்துக்குள் பாதரசம் கலந்த மண்ணை சீரமைக்கும் பணி முறையாக நடைபெறவில்லை என்பது செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் சீரமைப்பு பணிகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து நீர் மண்மாதிரிகளை எடுத்து அதனை பகுப்பாய்வு செய்து அதன்படி பரிந்துரைகளை வழங்க வேண்டும்.
இந்த பரிந்துரைகளின் படி நிபுணர்குழு தெரிவிக்கும் காலக்கெடுவுக்குள் பாதரச பாதிப்புகளை ஆலை நிர்வாகம் சரிசெய்ய வேண்டும். அந்த பகுதி முதன்மை வனப்பாதுகாவலர் தலைமை வனவிலங்கு காப்பாளர்கள் வழங்கும் வழிகாட்டுதல்களின் படி காப்புக்காடுகள் வனவிலங்கு சரணாலயத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ஆலை வளாகத்தில் அனுமதியின்றி 440 மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக வெட்டப்பட்ட 1 மரத்திற்கு பதிலாக 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். பாதரச கழிவுகளிலிருந்து கொடைக்கானல் பகுதியை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.