ஜெர்மனில் கடும் குளிரில் இளம்பெண் ஒருவர் வெட்ட வெளியில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது பனிப்பொழிவு மிகவும் கடுமையாக உள்ளது. -15 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகி இருப்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள பவேரிய மாநிலத்தில் இருக்கும் நியூரம்பெர்க் என்ற நகரில் காவல்துறையினர் நேற்று அதிகாலை 5 மணிக்கு சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது 20 வயதுடைய பெண் ஒருவர் ரயில் சுரங்கப் பாதையில் பிறந்த குழந்தையுடன் குளிரில் நடுங்கியபடி இருந்துள்ளார்.
அவர் அருகில் மற்றொரு பெண்ணும் அமர்ந்து தாய்க்கும் குழந்தைக்கும் Sleeping Bag வைத்து வெப்பம் ஏற்படுத்தி குளிரை தணிக்க முயற்சித்து வந்துள்ளார். அதாவது அந்த இளம்பெண் வீடின்றி வெளியில் வசித்து வருவதால் -15 டிகிரி செல்சியஸ் குளிரில் வெளியிலேயே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் என்று அறிந்ததும் காவல்துறை அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.