மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போட சென்றவர், Google pay வாயிலாக 550 ரூபாய் கட்ட வேண்டியதற்கு பதில் பெட்ரோல் பங்க் ஊழியரின் கவனக்குறைவால் 55 ஆயிரம் ரூபாய் செலுத்தி இருக்கும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பணத்தை இழந்த நபர் முதலில் தன் ஸ்கூட்டருக்கு தானேவில் உள்ள ஷெல் பெட்ரோல் பங்கில் டேங்க் ஃபுல் செய்துள்ளார். அதற்குரிய கட்டணமாக 550 ரூபாய் எனக் கூறியதும், அந்த வாடிக்கையாளரும் கூகுள் பே வாயிலாக பணம் செலுத்த முயற்சி செய்துள்ளார்.
அப்போது பங்க் ஊழியர் 550 ரூபாய்க்கு பதில் 55,053 என பதிவிட்டு இருக்கிறார். இதை அந்த வாடிக்கையாளருக்கு முறையாக கவனிக்காமல் பேமென்ட் செய்துள்ளார். அதன் பின் தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து 55 ஆயிரம் ரூபாய் டெபிட் ஆனது குறித்து வந்து மெசேஜை பார்த்து அந்த வாடிக்கையாளர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த விவகாரம் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அன்றைய தினமே வாடிக்கையாளரின் கணக்குக்கு பிடித்தம் செய்யப்பட்ட பணம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.