மும்பையில் ஐந்தாயிரம் திருநங்கைகள் இணைந்து உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். மும்பையில் ஏராளமான திருநங்கைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு யாரும் வேலை கொடுக்காத காரணத்தினால் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் யாசகம் பெற்று வாழ்கிறார்கள். அவர்கள் தாங்கள் பெறும் யாசகத்தில் இருந்து சிறிய தொகையை பொதுமக்கள் உடைய பசியை போக்க நன்கொடையாக கொடுக்கின்றனர். இந்த உணவகத்தில் காலை உணவானது வெறும் ஒரு ரூபாய்க்கும் மதிய உணவானது வெறும் பத்து ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. இந்த உணவகம் மும்பை அருகில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்திற்கு வெளியே செயல்படுகிறது.
இதன் பக்கத்தில் மருத்துவமனையும் இருப்பதால் நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்கள், தங்களுடைய அன்றாடம் சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் நபர்கள் என தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் உணவகத்தில் பசியாறி வருகிறார்கள். இந்த உணவகத்திற்கு அரசியல்வாதிகளோ வேறு யாருமே உதவி செய்வதில்லை. மாறாக இந்த உணவகத்தை நடத்தும் தொண்டு நிறுவனத்தில் உறுப்பினர்களாக இருக்கும் திருநங்கைகள் மட்டுமே தங்களுடைய யாசகத்தில் பெரும் பணத்தில் இருந்து தினமும் ஒரு ரூபாயை இந்த திட்டத்திற்காக வழங்குகிறார்கள். உணவகம் தொடங்கியுள்ள இவர்களின் சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.