தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் சென்னையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் 60 வது பிறந்தநாள் விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், சினிமாவை அரசியலமைப்படுத்த வேண்டியது முக்கியம் என்று தெரிவித்த அவர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த பேச்சு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பலர் அவருக்கு ஆதரவு கருத்து தெரிவித்தனர். வெற்றிமாறன் பேசியதில் எந்த உள்ளர்த்துமும் இல்லை. அவர் பேசியது உண்மை அல்ல, வரலாறு தான் என்று பல தரவுகளுடன் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த நடிகர் கமலஹாசன் பேசியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் கார்த்தி, நடிகர் விக்ரம் ஆகியோருடன் இணைந்து பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வெற்றிமாறன் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல், இந்துமதம் என்கின்ற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. சைவம் வைணவம் சமணம் என்றே இருந்தது. அப்போது மதங்கள் வெவ்வேறு இருந்தது. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். அவற்றை எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கர் ஷண்மத ஸ்தாபனம் என்று கொண்டு வந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. இந்த படம் ஒரு வரலாற்று புனைவு. இங்கு நாம் சரித்திரத்தை புனைய வேண்டாம், பிரிக்க வேண்டாம், மொழி அரசியலை திணிக்க வேண்டாம். நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.