Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெற்றி சான்றிதழை வழங்க மறுத்த அதிகாரிகள்…. தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

அ.தி.மு.க வேட்பாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதியின் 23-வது பிரிவு மற்றும் 26-வது பிரிவுகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் 23 வது வார்டில் போட்டியிட்ட கோதண்டராமன் 4 வாக்குகள் வித்தியாசத்திலும்  26 வது வார்டில் போட்டியிட்ட ஜெயப்பிரியா சக்திவேல் 37 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து  ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோதண்டராமன் மற்றும் ஜெயப்பிரியா சக்திவேலுக்கும் வெற்றி சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அவர்கள் இருவரும் தேர்தல் அதிகாரிகளிடம் தங்களுக்கு வெற்றி சான்றிதழ் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் உங்களது தொகுதிகளில் தி.மு.க வினர் மறு வாக்குப்பதிவுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறி வெற்றி சான்றிதழை தர மறுத்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த கோதண்டராமன் மற்றும் ஜெயப்பிரியா சக்திவேல் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து  அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் லட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் கண்காணிப்பாளர் அந்த தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு பதிவுகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளார். அதன்பிறகு கோதண்டராமன் மற்றும் ஜெயப்பிரியா சக்திவேலுக்கு வெற்றி சான்றிதழை வழங்கியுள்ளார்.

Categories

Tech |