வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 7 லட்சம் ரூபாயை மோசடி செய்த 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வடகரை சீதாராம்நகரில் ஆஷிப்ராஜா என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் கட்டிடத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் அலுவலகம் ஒன்றை மேட்டுப்பட்டியை சேர்ந்த ராஜகணபதி, பண்ணைப்புரத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய இருவரும் நடத்தி வந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் ஆஷிப்ராஜாவிடம் நல்ல சம்பளத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி இருப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய ஆஷிப்ராஜா 3 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஆஷிப்ராஜா தனது நண்பர்களிடம் கூறிய நிலையில் காளிராஜ் 1¾ லட்சம் ரூபாய், யாஷிப்ரகுமான் 1½ லட்சம் ரூபாய், பசீர்ஷஹானி 1 லட்சம் என ராஜாகண்ணன், கார்த்திகேயனிடம் வழங்கியுள்ளனர். மேலும் அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கி தராமலும், எவ்வித தகவலும் அளிக்காமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஆஷிப்ராஜா அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்ட போது கார்த்திகேயன் பணத்தை கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆஷிப்ராஜாவின் தாய் நாஜிநிஷா தேனி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து ராஜாகண்ணன் மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.