வெளிநாட்டிற்கு வேலை செல்ல விரும்புவோர் பதிவு செய்யப்பட்ட ஆள்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனங்கள் மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் நேரடி நியமன முறையில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் நேரடி வேலைவாய்ப்பு என்றால் அந்த நிறுவனத்தின் தகவல்களை புலம்பெயர் அதிகாரிகளிடம் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆள்சேர்ப்பு முகவர் குறித்த தகவல்களை www.meaindia.nic.in, india.gov.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று சரி பார்க்கலாம். எந்த ஒரு தகவலையும் உறுதி செய்யாமல் பணம் மற்றும் பாஸ்போர்ட் சான்றிதழ் எதையும் வழங்கக்கூடாது.
முகவர் கட்டணம் ஒன்றரை மாதத்திற்கு அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் ஆகும். அதற்கு மேல் உரிய ரசீதுகள் இல்லாமல் கொடுக்க வேண்டாம். போலி முகவர்கள் பற்றி அறிந்தால் உடனே புகார் அளிக்கவும். விசா எடுக்கப்பட்ட நோக்கத்திற்காக மட்டுமே வெளிநாட்டில் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் சிறை தண்டனை உறுதியாகும். மேலும் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பு காப்பீட்டை சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பதிவு செய்ய வேண்டும்.
வெளிநாடு செல்வோர் பாஸ்போர்ட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு ஒப்பந்தம் அல்லது வெற்று காகிதத்தில் கையெழுத்திட கூடாது. வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்ப உரிய வங்கிக் கணக்கை வைத்திருக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது