வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவருக்கு என்ன ஆனது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி தியாகவன்சேரி பகுதியில் கிரிஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் என்னுடைய கணவர் சரத்குமார் கடந்த மாதம் சவுதி அரேபியாவிற்கு சென்றார். அவர் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். அவரிடம் ஏர்வாடியைச் சேர்ந்த ரியாத் என்பவர் ஒரு கருவாடு பார்சலை கொடுத்தார். அந்த நபர் தனக்கு வேண்டியவர் சவுதி அரேபியாவில் இருக்கிறார் அவரிடம் கருவாடு பார்சலை கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.
அந்த பார்சலை வாங்கி எனது கணவர் பையில் வைத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் என்னுடைய கணவரின் பையை சோதனை செய்ததில் கருவாடு பார்சலில் தடை செய்யப்பட்ட பொருள் இருந்துள்ளது. இதனை அடுத்து என்னுடைய கணவருக்கு என்னானது என்பது குறித்து தெரியவில்லை. நான் என்னுடைய கணவரை கண்டுபிடித்து தருமாறு மத்திய, மாநில அரசின் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாவட்ட ஆட்சியர் வெளிநாடு வாழ் தமிழர் நல இயக்குனருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாக கூறினார். இதற்கு நீதிபதி சரத்குமாருக்கு என்ன ஆனது என்பதை உடனடியாக கண்டுபிடித்து நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார். மேலும் வழக்கு 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.