தடுப்பூசி விலை உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது கட்ட தடுப்பூசி திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசு இதில் மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகவே உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பூசியை வாங்கிக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பாரத் பயோடெக்கின் கோவக்சின் தடுப்பூசியின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பு ஊசி 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 1,200 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மத்திய அரசுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி 150 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும், மத்திய அரசுக்காக 50 விழுக்காட்டிற்கு மேற்பட்ட உற்பத்தியை ஒதுக்கி வைத்திருப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.
இதைப்போல் கோவிஷீல்டு தடுப்பூசியை வரும் மே 1ஆம் தேதி முதல் மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்ய சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பல்வேறு நாடுகளை ஒப்பிட்டால் உலகிலேயே இந்தியாவில்தான் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை மிகவும் அதிகம் என்கிறார்கள் மருத்துவ ஆர்வலர்கள்.
சவுதி அரேபியாவுக்கு, தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்திய மதிப்பில் 394 ரூபாய்க்கு மட்டும கோவிஷீல்டு வினியோகிக்கப்படுகிறது. அமெரிக்காவும், வங்கதேசமும் கோஷீல்டு தடுப்பூசியை சுமார் 300 ரூபாய் கொடுத்துதான் வாங்குகின்றனர். பிரேசிலுக்கு 236 ரூபாய்க்கும், பிரிட்டனுக்கு 225 ரூபாய்க்கும் ஒரு டேஸ் கோவிசில்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் கூட தமது உறுப்பு நாடுகளுக்காக தடுப்பூசி ஒன்றை இந்திய மதிப்பீட்டில் 160 ரூபாய் முதல் 263 ரூபாய் வரை மட்டுமே கொடுத்து கொள்முதல் செய்கிறது.