பங்களாதேஷ் நாட்டுக்கு சென்ற பிரித்தானிய குடும்பத்தினருக்கு விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட விவகாரத்தில் 3-வது நபர் உயிரிழந்துள்ளார்.
Cardiff-ஐ சேர்ந்த Rafiqul Islam (51) குடும்பத்தினர் 2 மாத விடுமுறைக்காக பங்களாதேஷ் நாட்டிற்கு சென்று இருந்தனர். அங்கு Sylhet எனும் இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கச்சென்ற குடும்பத்தினர் சுயநினைவை இழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே, Rafiqul Islam மற்றும் அவரது மகனான Mahiqul (16) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
இதில் Rafiqul குடும்பத்தினருக்கு விஷம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் விசாரணை ஒன்றை தொடங்கினர். ஆனால் Rafiqul மற்றும் அவரது மகனான Mahiqul ஆகிய இருவரின் முதல் ட்ட பிரேதப் பரிசோதனையில் அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
அதன்பின் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பிய Rafiqul உடைய மனைவியான Husnara (45), தம்பதியரின் மகனான Sadiqul (24) கூறிய ஒரு தகவலைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் பழுதான ஜெனரேட்டர் ஒன்றில் இருந்து வெளியான புகையால் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை துவக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடும்பத்தில் 3வது நபராக Rafiqul-ன் மகளான Samira (20)ம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். குடும்பமாக மகிழ்ச்சியாக நேரம் செலவிடலாம் என்ற எண்ணத்தில் விடுமுறையில் அந்த பிரித்தானிய குடும்பம் பங்களாதேஷ் சென்ற நிலையில், 3 பேர் உயிரிழந்துவிட்டதால் குடும்ப உறுப்பினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.