பாகிஸ்தானின் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் இம்ரான் கான் தான் காரணம் என எதிர்க்கட்சிகள் கூறி வந்ததை தொடர்ந்து அவருடைய ஆட்சிக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர். இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.
ஏற்கனவே இம்ரான் கானுக்கு ஆதரவாக இருந்த பலர் தங்களுடைய ஆதரவை வாபஸ் பெற்று விட்டதால் கிட்டத்தட்ட ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் இம்ரான்கான் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவிப்பதால் இன்று நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிபர் இம்ரான் கான் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “எனக்கு முன்பு ஆட்சியில் இருந்த சிலர் சில வெளிநாடுகளுக்கு கைக்கூலியாக செயல்பட்டதால் நாடு இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சக்திகளுக்கு பயந்து அவர்கள் செய்து வந்த காரியத்தால் தற்போது நாம் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறோம். ஆனால் நான் வெளிநாட்டு சக்திகளுக்கு பயந்து செயல்படாமல் தனித்து செயல்பட்டு வருகிறேன். பாகிஸ்தானின் எதிர்காலம் மட்டுமே எனக்கு பெரிதாக தெரிந்தது. இந்த சதிக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் போராட வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் வெளிநாட்டு சதி ஒடுக்க போராட வேண்டும்” என அவர் கூறினார்.