இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் தங்களது குறிக்கோளை மனதில் வைத்து கொண்டு பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். பலர் வெளிநாடுகளுக்கு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். விவசாயம் செய்வதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்தையூர் கிராமத்தை சேர்ந்த கற்குவேல் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பை நிராகரித்து விட்டு விவசாயம் செய்து அசத்தி வருகிறார். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு மும்பையில் இருக்கும் ஐடிசி மராத்தா ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரை வெளிநாட்டில் பணி புரிவதற்காக அழைத்துள்ளனர்.
ஆனாலும் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் கற்குவேல் தனது சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டார். அன்றைய காலகட்டத்தில் இந்த கிராமம் வெளியூர்களில் இருந்து வந்து வேளாண் பொருட்களை வாங்கி செல்லும் மையமாக இருந்துள்ளது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல வறட்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைதேடி கிராம மக்கள் வெளியூருக்கு சென்று விட்டனர். இந்நிலையில் கற்குவேல் ஆள் இல்லாத தனது சொந்த கிராமத்தில் இருக்கும் பூர்வீக விவசாய நிலங்களை உழவு செய்து கீரைகள், பயறுவகைகள், அவரைக்காய், வெள்ளரி போன்றவற்றை பயிரிட்டு அசத்தி வருகிறார். மேலும் கற்குவேல் வாத்து, முயல், வெளிநாட்டு எலி, கோழி, கினி பறவைகள் போன்றவற்றையும் வளர்த்து வருகின்றார்.
இதுகுறித்து கற்குவேல் கூறியதாவது, பல லட்ச ரூபாய் சம்பாதித்தாலும் விவசாயம் செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி எதிலும் கிடைக்காது. எனது அப்பா தனியார் மருந்து கம்பெனியில் பொது மேலாளராக இருக்கிறார். எனது அம்மா, தம்பி ஆகியோர் மதுரையில் இருக்கின்றனர். நான் விவசாயத்தை மேம்படுத்தும் எண்ணத்தில் விவசாய பண்ணை, முதியோர்களுக்கான இல்லம் போன்றவற்றை கட்ட முடிவு செய்துள்ளேன். இந்த கிராமத்தில் இருந்து வேலை தேடி வெளியூர் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்து விவசாயம் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என கற்குவேல் தெரிவித்துள்ளார்.