மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இதையடுத்து அவர் பேசியதாவது “அரசியலுக்கு பலர் பல காரணங்களுக்காக வந்து இருக்கலாம்.
இதற்கிடையில் நான் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றி, பிறகு அதனை வேண்டாம் என எண்ணி அரசியலுக்கு வந்ததற்கு காரணம் ஆதரவற்றோர், நலிந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடவேண்டும் எனும் எண்ணத்தில்தான். நான் அமைச்சரான பிறகு இதுபோன்ற நிகழ்ச்சிகள் என் தொகுதியில் நடத்தி பல பேருக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறேன்.
மேலும் பல்வேறு பயனாளிகளுக்கு வீட்டுக்கே சென்று நானே உபகரணங்களை வழங்கியிருக்கிறேன். இதுவரையிலும் தனக்கு வந்த தகவலின் அடிப்படையில் 800 பேர் பதிவுசெய்து, அவற்றில் 200 பேருக்கு அங்கேயே நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது. மீதம் இருக்கும் 600 பேருக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டும். உங்களுக்கு இதுபோன்று நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. நான் எந்தஒரு பொறுப்புக்கு போனாலும் இத்தொகுதி மக்களை மறக்கமாட்டேன்” என்று பேசினார்.