தமிழகத்தில் ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் ஆலோசனை பெறுவதற்காக உதவி எண்களை நாடலாம் என்று தொழிலாளர் நலத்துறை கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. எனவே தமிழகத்தில் வேலைபார்க்கும் வெளிமாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலைகளில், அவர்கள் தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிப்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையிலும், அதற்குரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யவும், தொழிலாளர் துறையில் மாநில கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தங்கி பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு 044 2432 1438, 2432 1432 ஆகிய அவசர உதவி எண்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். அதனால் தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் எந்தவித அச்சமும், பயமும் இல்லாமல் தங்கள் பணி இடங்களில் வழக்கம்போல் பணிபுரியலாம். மேலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் போது மாநில கட்டுப்பாட்டு அறையின் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான நிவாரணம் பெற ஆலோசனை வழங்கப்படும். அரசு அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.