நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பின் நடித்துள்ள திரைப்படம் “பீஸ்ட்” ஆகும். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தபடத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜாஹெக்டே நடித்து இருக்கிறார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியது. அதன்பின் அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட அந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் “பீஸ்ட்” படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து தமிழக முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா தமிழக உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, இந்த படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து உள்ளதாக கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 13 ஆம் தேதி பீஸ்ட்படத்தை வெளியிட்டால் அசாதாரண நிலை ஏற்படும். இதனால் அந்த படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.