பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயில் 104 டிகிரி கொளுத்தியதால் பொது மக்கள் வெளியில் வருவதை தவிர்த்தனர்.
பெரம்பலூர் மாவட்ட பொது மக்களை கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் பகல் நேரத்தில் அதிகமாக உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக வெயிலின் அளவு 102.2 டிகிரி செல்சியஸ் என பதிவானது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வெயில் 104 டிகிரி கொளுத்தியது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து, வீடுகளிலேயே முடங்கினர். சாலையில் நடந்து செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தலையில் துணி போட்டுக்கொண்டும், குடை பிடித்தபடியும், பெண்கள் துப்பட்டாவால் தங்களது தலையில் மூடிக்கொண்டும் சென்று வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தால் தாகத்தை தீர்க்கவும், கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவும் பொதுமக்கள் கரும்புச்சாறு, பழச்சாறு, முலாம் பழச்சாறு, இளநீர், மோர் ஆகியவற்றை கடைகளில் வாங்கி பருகுகின்றனர். தர்பூசணி, நுங்கு ஆகியவற்றையும் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதியது வண்ணம் உள்ளது. விற்பனையும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கத்திரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் மே மாதம் 4-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கத்திரி வெயிலை எப்படி சமாளிப்பது என்று தற்போதே புலம்ப ஆரம்பிக்கின்றனர்.