சிவகங்கை மாவட்டத்தில் அனல் காற்று வீசி வருவதால் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை கூடுதலாக 2 டிகிரி அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் வெயில் கொளுத்தியது. இதனால் வாகனங்களில் செல்வோர் சாலையில் குறைவாக காணப்பட்டனர். பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் வெயில் கொளுத்தியதால் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். மாலையில் வெயில் குறைந்த பின்னர் பொதுமக்கள் நடமாட்டத்தை தெருக்களில் காணமுடிந்தது.
பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை சிவகங்கை மாவட்டத்தில் வெயிலுடன் கூடிய அனல் காற்று வீசியது. அதனால் வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்ய செல்லவில்லை. வேட்பாளர்கள் மாலை 5 மணிக்கு மேல்தான் ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றனர். குளிர்பான கடைகளில் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அதிக அளவு அனல் காற்று வீசி வருவதால் காரைக்குடி பகுதியில் தற்போது பகல் நேரத்தில் 100 அடி சாலை, கல்லூரி சாலை, அழகப்பா பல்கலைக்கழக சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியமான சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.