கள்ளச்சாவியை பயன்படுத்தி வீட்டில் கொள்ளையடித்து சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் பகுதியில் ஜோதிமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூமிக்கடியில் இன்டர்நெட் சம்பந்தமான வயர்கள் பதிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வருகின்றார். இதற்காக ஜோதிமணி தனது வீட்டின் ஒரு பகுதியை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றி அதில் ஊழியர்களை தங்க வைத்துள்ளார். இந்நிலையில் வெளியூருக்கு சென்ற ஜோதிமணியின் குடும்பத்தினர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 4 1/2 கோடி ரூபாய் பணம் மற்றும் 30 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஜோதிமணி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது வீட்டின் பூட்டை உடைக்காமல் கள்ளச்சாவி பயன்படுத்தி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஜோதிமணியின் அலுவலகத்தில் பணிபுரியும் சேகர் என்பவர் தனது நண்பர்களான ஆறுமுகம், சுரேஷ், சதீஷ்குமார் ஆகியோருடன் இணைந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் கொள்ளையடித்த பணத்தில் 4 பேரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை அடுத்து 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.