காட்டாறு வெள்ளத்தில் மோட்டார் சைக்கிள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஐமுனாமரத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் மழை நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் சில இடங்களில் காட்டாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளம் நம்பியம்பட்டு ஊராட்சிக்கு செல்லும் வழியில் உள்ள பேராறு தரைபாலத்தை மூழ்கடித்தபடி செல்கின்றது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்துள்ளார்.
அப்போது அவர் காட்டாறு வெள்ளத்தை மோட்டார் சைக்கிளுடன் கடக்க முயன்றார். ஆனால் அதிக வேகமாக தண்ணீர் வந்ததால் அந்த வாலிபர் கடக்க முடியாமல் பாலத்தின் நடுவில் மோட்டார் சைக்கிளுடன் நின்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராடி அந்த வாலிபரை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.