கோவை மாவட்டம் வால்பாறைபகுதியில் அவ்வப்போது காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நடுமலைஆறு உட்பட ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. அதேபோன்று சோலை ஆறு அணைக்கு வினாடிக்கு வினாடி தண்ணீர் வரத்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் 7வது நாளாக சோலை ஆறு அணையின் நீர்மட்டமானது முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் இருக்கிறது. ஆகவே பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரிநீர் கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த மழை காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி அளவில் வால்பாறை to பொள்ளாச்சி மலைப் பாதையில் 15வது கொண்டை ஊசி வளைவு அருகில் திடீரென மரம் முறிந்துவிழுந்தது.
இதன் காரணமாக அந்த சாலையில் 2 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுபற்றிய தகவலின்படி நெடுஞ்சாலைத்துறையினர் நள்ளிரவு நேரத்திலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. இதனிடையில் சோலை ஆறு அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 811 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து மின் நிலையம் -1 இயக்கப்பட்டும் சேடல்பாதை வழியாகவும், பரம்பிக்குளம் அணைக்கு 2 ஆயிரத்து 905 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் சோலையாறு மின்நிலையம் -2 இயக்கப்பட்டும் மதகுகள் வழியாகவும் 3ஆயிரம் கனஅடி தண்ணீர் கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. மேல் நீரார் அணையில் இருந்து 1,458 கன அடி தண்ணீரும், கீழ் நீரார் அணையில் இருந்து 430 கன அடித் தண்ணீரும் சோலை ஆறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. வால்பாறையில் தொடர்மழை பெய்து வருவதால் ஏற்படும் வெள்ளசேதங்களை தவிர்ப்பதற்கு முன்எச்சரிக்கையாக அனைத்துதுறை அதிகாரிகளும் தயார்நிலையில் இருக்கின்றனர்.