வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. இதனால் பொதுமக்கள் அவ்வழியாக செல்லாமல் இருப்பதற்காக காவல்துறையினர் தரைபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் வைத்து வழியை அடைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அமைத்த தடுப்பை மீறி 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வெள்ளத்திற்கு நடுவே செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்போது இருவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதனை அடுத்து பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் அங்கிருந்த கம்பியை பிடித்துக்கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். ஆனால் மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.