தரைப்பாலம் உடைந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் ஆறு, வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ராகவன் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆத்திப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்து சென்று போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திப்பட்டு, அரும்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி பழைய பட்டிணம் வழியாக மடப்பட்டுக்கு செல்கின்றனர்.
பின்னர் அங்கிருந்து உளுந்தூர்பேட்டை, பண்ருட்டிக்கு சென்று வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சிலர் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் சென்று வருவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு மேம்பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.