வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. அந்த வகையில் சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மேலும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களின் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அன்றாடத் தேவைகளுக்கே மிகவும் சிரமப்பட்டனர். அதன்பின்னர் மழை படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் 2 நாட்கள் பெய்த கனமழையால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதைப் பற்றி டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை மாநகரம் தற்போது மீண்டும் ஒரு பேரிடரை கடந்து கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் அனுபவிக்காத துன்பங்களையும், துயரங்களையும் சென்னை மற்றும் புறநகர் மாவட்ட மக்கள் நேற்று அனுபவித்திருக்கிறார்கள். இந்தக் கொடுமைகள் அனைத்திற்கும் மழைமீது பலி சுமத்திவிட்டு அரசு நிர்வாகம் தப்பிக்க முடியாது. சென்னையில் பெய்த கன மழையால் சென்னை மாநகர மக்கள் அனுபவித்த கொடுமைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மழை பெய்ய தொடங்கிய 3 மணி நேரத்தில் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையின் அனைத்து முதன்மை சாலைகளையும் பார்க்கும் போது வாகன நிறுத்தம் போலவே காட்சியளித்தன. 1 கிலோமீட்டர் தொலைவைக் கடக்க கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆனது. இந்த நெரிசலில் சிக்கி கொண்ட பலர் 10 முதல் 12 கிலோ மீட்டர் தொலைவை நடந்து சென்றுள்ளனர். மெட்ரோ ரயில் சேவை மட்டும் இல்லாவிட்டால் பலரால் நேற்று வீடுகளுக்கு சென்று இருக்கவே முடியாது. இந்த துயரங்களை சென்னை மாநகர மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். சென்னையில் இந்த அளவுக்கு மழை பெய்யும் என்பதற்கான அறிகுறி நேற்று காலையில் கூட தென்படவில்லை.
வானிலை ஆய்வு மையமும் இது பற்றி எந்த முன்னறிவிப்பும் வெளியிடவில்லை. மிகப் பெரும் மழையை கணிக்கத் தவறியதிலிருந்தே தோல்வி தொடங்கிவிட்டது. மேலும் சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலுக்கு மழைவெள்ளம் மட்டுமே காரணமல்ல. வாகன போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்படாததுதான் மிக முக்கிய காரணம் ஆகும். அண்ணா சாலை, பூந்தமல்லி, நெடுஞ்சாலை, 100 அடி சாலை உள்ளிட்டவற்றில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்ட நிலையில், அவற்றை ஒட்டிய உட்புற சாலைகள் காலியாகவே இருந்தன.
அவற்றில் எந்தெந்த சாலைகள் பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்றவை என்பதை அந்தந்த பகுதிகளில் உள்ள போக்குவரத்து காவலர்கள் அடையாளம் கண்டு அந்த சாலைகளில் சிறிய வகை வாகனங்களை திருப்பிவிட்டிருந்தால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திருக்கலாம். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மழைநீரால் சேதமடைந்துள்ள பகுதிகளில் மழை வெள்ள நீர் வடிகால்கள் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் சென்னையில் தொடர் மழை பெய்யும் போது ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் சென்னையில் 4 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது விரும்பத்தக்கது அல்ல. இனி இப்படி ஒரு நிலை ஏற்படாத வகையில் அரசு செயல்பட வேண்டும். மேலும் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை விரைந்து வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.