சென்னையில் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கிறது.
வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு நூறடி ரோடு உள்ளிட்டவை வாகனம் செல்ல முடியாத அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மட்டுமல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.