Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணி..!! படகிலேயே பிரசவம் நடந்தது …!!

பீகார் மாநிலத்தில் சமீபத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழையால்  சுமார் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளப்பெருக்கை சமாளிப்பதற்காக 21 என்.டி.ஆர்.எஃப் குழுவினர் பல மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் கோபாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், 25 வயதான கர்ப்பிணி ஒருவர் சிக்கி இருப்பதாக மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் விரைந்த மீட்பு படையினர், பத்திரமாக கர்ப்பிணியை படகில் ஏற்றினர். அப்போது, திடீரென்று அப்பெண்ணுக்கு பிரசவ வலி வந்ததால், மீட்பு படையினர் உதவியுடன் படகிலே பெண் குழந்தை பிறந்தது. மீட்பு படையுடன் சேர்ந்து ஆஷா குழுவினரும் இருந்ததால் பிரசவத்திற்கு உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி என்.டி.ஆர்.எஃப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “என்.டி.ஆர்.எஃப்பின் ஒன்பதாவது பட்டாலியன் குழுவினர்தான், கர்ப்பிணி பெண் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், தாயும், குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலம் பஞ்சாரியா கிராமத்தில் உள்ள பொது சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டனர். தற்போது, இருவரும் நன்றாக இருக்கிறார்கள். என்.டி.ஆர்.எஃப் வீரர்கள் அனைவருக்கும் அவசர காலத்தில் எவ்வாறு பிரசவத்தை கையாளுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை என்.டி.ஆர்.எஃப் படகில் 10 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |