கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுப்பறை அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணை மீது தண்ணீர் பாய்கிறது. எனவே பொதுமக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெட்டுமணி பகுதியில் இருந்து தடுப்பணை வழியாக ஒருவர் மறுக்கரைக்கு நடந்து சென்ற போது ஆற்றுக்குள் தவறி விழுந்ததால் வெள்ள நீர் அவரை இழுத்து சென்றது.
ஆனாலும் அந்த நபர் நீந்தி புதர் மேட்டுப்பகுதியில் இருக்கும் செடி கொடிகளை பிடித்து கொண்டு கரைக்கு வர முடியாமல் சிக்கினார். இதனை பார்த்த சிலர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டனர். பின்னர் அந்த நபர் பேரை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான தேவராஜ் என்பது தெரியவந்தது. அவரை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.