கோவை அருகே பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலை எனவும் தென்கைலாயம் அழைக்கின்றனர். இங்கு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இதனால் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த மலைக்கு செல்லும் பாதை அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், திடீரென வானிலை மாறுவதாலும் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. சித்ரா பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் மலை மீது சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பினார்கள்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் திடீரென பக்தர்கள் மலை மீது ஏறி செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளன. வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதன் காரணமாக பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வழக்கம்போல் மே மாதம் முழுவதும் மலைக்குச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அத்துடன் வனத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பக்தர்கள் முறையிட்டுள்ளனர். இதையடுத்து வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 6ஆம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மலையின் மீது எளிதில் தீ பிடிக்க வாய்ப்புள்ளது. இதனால் பக்தர்கள் தீ பிடிக்க கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. அத்துடன் மலை மீது ஏற்கனவே செல்லக்கூடிய பாதையில் மட்டும் தான் செல்ல வேண்டும். பாதை தவறி அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வது, விலங்குகளை சீண்டுவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.