வெள்ளி கிரகத்துக்கு வருகின்ற 2025 ஆம் ஆண்டில் விண்கலம் அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பிரான்ஸ் செயல்பட உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமாக திகழும் இஸ்ரோ, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் மங்கள்யான் என்ற திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. மேலும் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் திட்டமான சந்திராயன்1 மற்றும் சந்திராயன் 2 ஆகிய திட்டங்களை மேற்கொண்டது. இவற்றைத் தொடர்ந்து வெள்ளி 2 கிரகத்தின் மீது பார்வையை செலுத்தியுள்ள இஸ்ரோ,வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு விண்கலம் அனுப்ப திட்டம் தீட்டியுள்ளது. இந்தத் திட்டம் வருகின்ற 2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட உள்ளதால், அதில் பிரான்சும் பங்கேற்க உள்ளது.இந்த தகவலை பிரான்ஸ் நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சிஎன்இஎஸ் வெளியிட்டுள்ளது.இந்தியாவின் இந்த விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் முதல் முறையாக இடம்பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் பற்றி இஸ்ரோ தலைவர் மற்றும் சிஎன்இஎஸ் தலைவரும் அலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஆன உறவை மேலும் வலுப்படுத்த என்ன செய்யலாம் என்று விவாதம் செய்தனர். ஆனால் இதுபற்றி இஸ்ரோ தரப்பில் எந்தவித கருத்தும் கூறப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா இணைந்து அணுசக்தி,விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வருகின்ற 2022ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி வீரர்கள் 3 பேரை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் ‘ககன்யான்’ என்ற திட்டத்தில் பிரான்ஸ் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.