குடிப்பதற்காக வீட்டில் உள்ள வெள்ளிகொலுசை எடுத்துவந்து அடமானம் வைக்க வந்த இரு நபர்கள் கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில் அடகுகடை வைத்திருப்பவர் ராஜமாணிக்கம் (31). இவர், தங்க நகைகளுக்கு மட்டும் அடகு பணம் கொடுத்து வருகிறார். இவரின் அடகு கடைக்கு நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த தீபக் மற்றும் சபரீசன் ஆகிய இருவரும் வந்துள்ளனர். அவர்கள் கடை உரிமையாளரான இராஜமாணிக்கத்திடம் சென்று வெள்ளி கொலுசை வைத்து பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் தங்க நகைக்கு மட்டும் பணம் தரப்படும் என்று கூறியதால் ராஜமாணிக்கத்திடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றியதால் ராஜமாணிக்கத்தை தாக்கியதில் அவரின் தலையில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியது. அதன்பின் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் ராஜமாணிக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் குடிப்பதற்காக வீட்டில் உள்ள வெள்ளி கொலுசை எடுத்து வந்து அடமானம் வைத்ததாகவும், ஏற்கனவே தீபக் மீது இரு கொலை முயற்சி வழக்கு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் இந்து முன்னணி அமைப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.