வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டதால் கிராமங்களுக்குள் தண்ணீர் போகாமல் தடுக்கப்பட்டது.
தமிழக முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் வைகை அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் திறந்து விடப்பட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தது. மேலும் தண்ணீரை வீணாக்காமல் பெரிய கண்மாய் என வழியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. பின்னர் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து தண்ணிர் கடலுக்கு திறந்து விடப்பட்டது. வைகை அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தார்கள். இதனால் பெரிய கண்மாயின் கொள்ளளவு குறைந்து வந்த நிலையில் வைகை அணையில் இருந்து அதிக அளவில் சீறிப்பாய்ந்து வந்த தண்ணீரை பெரிய கண்மாய்க்குள் எடுத்தார்கள். மேலும் கடலில் கலக்கும் தண்ணீரின் அளவு குறைந்தது. இதனால் காவனூர், தொருவலூர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் குறிப்பாக காவனூர் ஆற்று பாலத்தை தாண்டாமல் தண்ணீர் சாதாரணமாக ஓடை போல் சென்றது.