கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மணமக்கள் இருவரும் அண்டாவில் ஏறி மிதந்து வந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றிலிருந்து பலர் தப்பினாலும் வீடு, கார் உள்ளிட்ட உடமைகளை மக்கள் பலரும் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடியாத காரணத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆலப்புழா மாவட்டமும் ஒன்று. இந்நிலையில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளரான ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா என்பவர்களுக்கு நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தாளவாடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தை புக் செய்திருந்தனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மண்டபம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்துள்ளது. அதே போல் அங்கு செல்வதற்கான சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மண்டபத்தை எளிதில் அடைய முடியவில்லை. இதனால் என்ன செய்வது என்று யோசித்த மணமகளின் குடும்பத்தினர், சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரம் ஒன்றை படகாக மாற்றி மணமக்களை அமரவைத்து மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு திருமணமும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இது குறித்து மணமக்கள் தெரிவித்துள்ளதாவது: “மழையை காரணம் காட்டி மங்கல நிகழ்ச்சியை நிறுத்த வேண்டாம் என்று முடிவு எடுத்தோம். எனவே குறித்த தேதியில் திருமணத்தை நடத்தி விட்டோம்” என்று கூறியுள்ளனர்.