தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தலைநகர் சென்னையில் மட்டும் 171 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் சரியாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள பி ஏ 4, பி ஏ 5 வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இந்த வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். அந்தப் பகுதி கண்காணிக்கப்படும் . அதே சமயம் தமிழகத்தில் நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.