மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேடுகாட்டுபட்டி என்னும் கிராமத்தில் கண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விராலுரில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கண்ணப்பன் மீது பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த கண்ணப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த ப்ரட்ரிக் தாமஸ் மற்றும் ரிச்சர்ட் விஸ்வாஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம்டைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் விபத்தில் உயிரிழந்த கண்ணப்பனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.