தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடைபெறவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவிர மற்றும் மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறவில்லை. அதன் பிறகு கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறைந்ததால் நடப்பாண்டில் தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் சுகாதாரத்துறை மழைக்காலங்களில் பரவக்கூடிய சாதாரண வைரஸ் காய்ச்சல்தான் என்றும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து குழந்தைகளுக்கு பரவும் வைரஸ் காய்ச்சலின் காரணமாக புதுவையில் வருகிற 25-ஆம் தேதி வரை 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தற்போது கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு விடுப்பு வழங்குவதுடன் மற்ற வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தலாம் எனவும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.