கூலி விவசாயிகளை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் உள்ள கோபிச்செட்டிபாளையம் அருகே அமைந்த வெள்ளைமேடு கிராமத்தில் இருந்து 11 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் 3 சிறுவர்கள் ஆகியோர் விவசாய கூலி தொழிலுக்காக நம்பியூர் பகுதியில் நிலக்கடலை பறிக்க சென்றுள்ளனர். அவர்களை அழைத்து செல்வதற்கு வெங்கமேடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மினி சரக்கு வாகனம் உபயோகப்படுத்தப்பட்டது.
அவ்வாறு ஏற்றி சென்ற வாகனம் திடீரென சின்னக்கொரவம்பாளையம் ஓட்டைக்கிணறு பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோர சுவற்றில் மோதி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 வாகனம் மூலம் கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த எதிர்பாராத விபத்தில் ஜெயமணி என்ற பெண் விவசாயக் கூலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைதொடர்ந்து பத்து பெண்களில் மூன்று பேர் மிக ஆபத்தான நிலையில்மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 3 சிறுவர்கள், 10 பெண்கள், 2 ஆண்கள் படுகாயங்களுடன் கோபிசெட்டிபாளையத்தில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சிறுவலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விபத்துக்குள்ளான வாகனம் கடந்த ஒரு வார காலத்திற்கு முன்புதான் வாங்கப்பட்டது. வாகனத்தை அதிவேகமாக ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.